search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனி தொகுதி"

    தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை மத்திய அமைச்சர் என குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முன்பாகவே கடந்த 16-ந்தேதி சின்னமனூர் அருகே குச்சனூரில் வைக்கப்பட்ட கோவில் கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் எம்.பி என பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

    இதனால் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே எப்படி பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போடலாம் என எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பிறகு அந்த கல்வெட்டு மறைக்கப்பட்டது. அந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது தேனி நகர் முழுவதும் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத்குமார் என பெயர் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தேனி நகரில் பல பகுதிகளில் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத்குமார் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    அதில் ரவீந்திரநாத்குமார் பெயரோடு மத்தியஅமைச்சர் என சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சமூக ஊடகங்களில் வைரலாகும் சர்ச்சைக்குரிய அழைப்பிதழ்.

    இதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழில் ரவீந்திரநாத்குமார் பெயருக்கு அருகில் மத்திய அமைச்சர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிராம மக்கள் சார்பில் அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் பாராளுமன்ற உறுப்பினர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சிலர் மாற்றி மத்திய அமைச்சர் என சேர்த்து போலியாக சமூக ஊடகங்களில் பரவவிட்டுள்ளனர்.

    இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதவி வருவதற்கு முன்பாகவே மத்திய அமைச்சர் என பெயரிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டதால் மீண்டும் சர்ச்சையில் ரவீந்திரநாத்குமார் சிக்கியுள்ளார்.
    தேனி பாராளுமன்ற தொகுதியில் நடந்த முறைகேடு குறித்து வழக்கு தொடருவோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் 38 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. வெற்றிக்காக உழைத்த கூட்டணி தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    நாடு முழுவதும் அதிகார பலம், பண பலத்தால் மோடி வெற்றி பெறுள்ளார். தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அதிகாரபலம், பணபலத்தால் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    எனினும் தேனியில் 4½ லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான தேனியிலேயே எனக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.

    வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்துள்ளனர். இதுகுறித்து நான் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தேனி தொகுதியில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இன்னும் சில ஆதாரங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். எந்தெந்த ஆதாரங்களோடு வழக்கு தொடரலாம் என்று வக்கீல்களுடன் கலந்தாலோசித்துக்கொண்டு இருக்கிறோம். வழக்கு போட இன்னும் 25 நாட்கள் அவகாசம் இருக்கிறது. ஒரு வாரத்துக்குள் வழக்கு போடுவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்போம்.

    வாக்கு எண்ணிக்கையின் போது பல மின்னணு எந்திரங்களில் சீல் இல்லை. கேட்டால் அரக்கு 1 மாதத்தில் உருகலாம் என்கிறார்கள். சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். மதுரை வாக்குச்சாவடியில் இருந்த பெட்டி தேனி பாராளுமன்ற தொகுதியில் இருக்கிறது. இதுபோலபல வி‌ஷயங்கள் முறைகேடாக நடந்திருக்கின்றன. இதுதொடர்பாக வக்கீல்களோடு கலந்து ஆலோசித்து கண்டிப்பாக நான் வழக்கு தொடர இருக்கிறேன்.

    கேள்வி:- ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர இருக்கிறீர்களா? தேர்தல் ஆணைய முறைகேடுகளை பற்றி வழக்கு தொடர இருக்கிறீர்களா?

    பதில்:- இரண்டும் ஒன்று தானே. அவர் வெற்றி பெற்றார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை பற்றித்தான் வழக்கு தொடர இருக்கிறேன்.

    கே:- மத்தியில் காங்கிரஸ் தோல்விக்கு என்ன காரணம்?

    ப:- தமிழகத்தில் அமைந்தது போல ஒரு கூட்டணி அமையாதது தான் முக்கிய காரணம். ராகுல் காந்திதான் பிரதமராக வருவார் என்று தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்ததால் மதச்சார்பற்ற கட்சிகள் மும்முரமாக வேலை செய்தது. அதுபோல் வட இந்தியாவிலும், மற்ற இடங்களிலும் எதிர்க் கட்சிகள் அறிவிக்காத காரணத்தால் தான் இந்த மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டது.

     


     

    குறிப்பாக உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி போன்ற மாநிலங்களில் கூட்டணி அமைத்து ஒற்றுமையாக இருந்திருந்தால் மோடி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்க முடியாது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கின்ற 4 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் ஆங்காங்கே வாக்குப்பதிவு எந்திரங்களில் தவறு நிகழ்ந்திருப்பதாக சொன்னார்கள். அதைப் பற்றிய செய்திகள் முழுமையாக இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வரும்.

    கே:- முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி வழக்கு தொடருமா?

    ப:- காங்கிரஸ் காரிய கமிட்டி நேற்று தான் முடிந்திருக்கிறது. காங்கிரஸ் ஏன் தோற்றது என்று ஆராய்ச்சி செய்வதற்காக 4 பேர் கொண்ட கமிட்டியை ராகுல் காந்தி அமைத்திருக்கிறார். இதுபற்றி எல்லா செய்திகளையும் சேகரித்து கண்டிப்பாக வழக்கு தொடர வேண்டும் என்ற அவசியம் ஏற்படும் போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடரும்.

    கே:- ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார் வெற்றிக்கு மோடி காரணம் என்று சொன்னீர்கள் அது ஏன் என்று தெரியுமா?

    ப:- என்ன காரணம் என்று தெரியவில்லை. பன்னீர்செல்வம் மீது மோடிக்கு அவ்வளவு காதல் ஏன் என்று தெரியவில்லை. தமிழிசை சவுந்தரராஜன் மீது இல்லாத காதல், பொன். ராதாகிருஷ்ணன் மீது இல்லாத காதல், சி.பி.ராதா கிருஷ்ணன் மீது இல்லாத காதல், எச்.ராஜா மீது இல்லாத காதல், ஓ.பன்னீர் செல்வம் மகனின் மீது மட்டும் ஏன் மோடிக்கு அவ்வளவு காதல் என்று எனக்கு தெரியவில்லை. ஏதாவது விசே‌ஷ சங்கதிகள் இருக்கிறதா என்று மோடியிடம் தான் அதைப்பற்றி கேட்க வேண்டும்.

    தேனி தொகுதியில் இருக்கிற விவிபாட்டை முழுவதும் சரியாக எண்ண வேண்டும். நாங்கள் வழக்கு தொடரும் போது அதையும் சொல்வோம்.

    கே:- அடுத்த தேர்தலிலாவது வாக்கு சீட்டு முறையை கொண்டுவர தேர்தல் ஆணையத்துக்கு அழுத்தம் கொடுப்பீர்களா?

    ப:- அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே வாக்குப் பதிவு எந்திரங்கள் துல்லியமாக செயல்படுவதில்லை. எனவே அவர்கள் வாக்குச் சீட்டு முறைக்கு சென்று விட்டார்கள். நமது நாட்டை பொறுத்தவரை மோடியை போல ஒரு ஆளை வைத்துக் கொண்டு தேர்தல்கமி‌ஷன் எடுபிடியாக இருக்கின்றது. உச்சநீதிமன்றம் எடுபிடியாக இருக்கின்றது. ரிசர்வ் வங்கி எடுபிடியாக இருக்கின்றது. எல்லாவித அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டுள்ள மோடிக்கு மின்னணு எந்திரங்கள் மிகவும் வசதியாக போய்விட்டது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் மேலிடத்தில் நாங்கள் சொல்வோம், வாக்குப் பதிவு எந்திரத்தை விட வாக்குச்சீட்டு முறைதான் சிறந்தது என்று மேலிடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றி பெறவில்லை, மக்களின் நலன்தான் முக்கியம் என்று ரவீந்திரநாத்குமார் கூறினார்.
    மதுரை:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட என்னை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். எனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


    நான் வெற்றி பெறுவதற்காக பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றிபெறவில்லை. கனவிலும் அந்த எண்ணம் கிடையாது. மக்களின் நலனுக்காக வெற்றி பெற்றதாக நினைக்கிறேன்.

    தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தேனி தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. தோல்வியடைந்துள்ளது. அதற்கான காரணம் கண்டறியப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமார் முதல் சுற்றில் முன்னிலை பெற்றுள்ளார்.
    தேனி :

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராதா கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது உள்ளிட்ட 30 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இநத தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 54 ஆயிரத்து 51 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 லட்சத்து 55 ஆயிரத்து 565 வாக்காளர்கள் வாக்களித்தனர். பதிவான வாக்குகள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலையில் உள்ளார்.

    ம.நீ.ம - 29

    நாம் தமிழர் - 198
    தேனி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை மாற்ற முயற்சி நடப்பதாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் புகார் மனு அளித்துள்ளது.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, மூத்த வக்கீல்கள் சூரியபிரகாஷ், எஸ்.கே. நவாஸ் ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தேனி பாராளுமன்றத் தொகுதியில் மே 19-ம் தேதி நடைபெறவிருக்கும் மறுவாக்குப்பதிவில் பயன்படுத்தப்படவிருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அ.திமு.க. வேட்பாளருக்குச் சாதகமாக திருத்தப்பட்டிருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதனால், இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகியிருக்கும் அத்தனை துண்டுச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கோருகிறோம்.

    கடந்த ஏப்ரல் 18 அன்று வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதற்கு வசதியாக, கோவையில் இருந்து சட்டவிரோதமாக தேனிக்கு கொண்டு வரப்பட்ட 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக, காங்கிரசும், தி.மு.க.வும் ஏற்கனவே, தலைமை தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமான புகார்களை கொடுத்துள்ளன. இந்தப் புகார்களை பெற்றுக்கொண்ட தலைமைத் தேர்தல் அதிகாரி, கோவையில் இருந்து முறைகேடாக கொண்டு வரப்பட்ட 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பிவைக்கப்படும் என்றும் தேர்தல் நடைமுறையில் எந்த குறைபாடும் இராது, அப்படி இருக்குமானால், அது தடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    ஆனால், மீண்டும் 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் எடுத்து வந்துள்ளனர் என்பதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளோம். தற்போதுள்ள இயந்திரங்களுக்கு பதிலாக புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இது தமிழ்நாட்டின் துணை முதல்- அமைச்சரின் மகனான, அ.திமு.க. வேட்பாளருக்கு சாதகமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சட்ட விரோத உள்நோக்கத்துடனேயே செய்யப்பட்டுள்ளது.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் இருக்கும் தேர்தல் அலுவலர் அ.தி.மு.க. தேர்தல் முகவர் போலவே செயல்படுவதோடு, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார். இதன் மூலம், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த மக்களின் வாக்குகளைத் திருப்பி, முறைகேடுகள் மூலம் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியைத் தட்டிப்பறிக்க நினைக்கிறார்.

    அதனால் கோவையில் இருந்தும், திருவள்ளூரில் இருந்தும் தேனிக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உடனடியாக நீக்குவதோடு, மக்களுடைய வாக்குகளைத் திருத்த நினைக்கும் அ.தி.மு.க. வேட்பாளரின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, நியாயமான தேர்தலை தேனியில் நடத்தி முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
    தேனி தொகுதிக்கு திருவள்ளூரில் இருந்து கூடுதலாக 20 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்றதற்கு இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-

    தேனி தொகுதியில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு வேண்டும் என்று எந்த கட்சியும் கோரிக்கை வைக்கவில்லை.

    தேர்தல் ஆணையம் தன்னிச்சையாகவே ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள பாலசமுத்திரம், பெரியகுளம் தொகுதியில் உள்ள வடுகப்பட்டி ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் இதுபற்றி அறிவிப்பதற்கு முன்பே ரகசியமாக கோவையில் இருந்து 50 வாக்குப்பதிவு எந்திரங்களை தேனிக்கு கொண்டு சென்றனர். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகுதான் 2 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்போவதாக சொன்னார்கள்.

    அப்படியே பார்த்தாலும் இரு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு 50 எந்திரங்கள் எதற்கு?

    இந்த நிலையில் திருவள்ளூரில் இருந்து மேலும் 20 வாக்குப்பதிவு எந்திரங்கள், 30 விவிபாட் எந்திரங்களையும் கொண்டு சென்றுள்ளார்கள். இவ்வளவு எந்திரங்களை தேனியில் கொண்டு குவிப்பதற்கு என்ன காரணம்?

    இதையெல்லாம் பார்க்கும்போது ஏதோ, சதிசெயல் செய்ய திட்டமிடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

    தேர்தல் ஒழுங்காக நடந்தால் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. அதனால்தான் எப்படியாவது தில்லுமுல்லு நடத்த வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.

    எத்தனை பெட்டிகளை மாற்றினாலும் அவர் மிகப் பெரிய தோல்வி அடைவார். மக்கள் மத்தியில் கடுமையான கோபமும், ஆத்திரமும் ஏற்பட்டுள்ளது. தேனி தொகுதியில் சட்டம், ஒழுங்கு சீர்கெடும் நிலையை உருவாக்கி வருகிறார்கள். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் எங்கள் புகாரை தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெரியகுளம் செவன்த்டே பள்ளியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் வாக்கை பதிவு செய்தார். #Loksabhaelections2019 #OPS
    பெரியகுளம்:

    தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவு நாளான இன்று செவன்த்டே மெட்ரிக்பள்ளியில் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி தனது மகன் ரவீந்திரநாத்குமார், ஆகியோருடன் வாக்குப்பதிவை செலுத்தினார்.



    முன்னதாக இந்த மையத்தில் எந்திரம் பழுது காரணமாக 40 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமானது. அதன்பிறகு பழுது நீக்கப்பட்டு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. இந்த மையத்தில் காலை முதலே கைக்குழந்தையுடன் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.


    துணைமுதல்வரும், அவரது மகனும் வரிசையில் வந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

    இதேபோல் தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் கம்பம் அருகில் உள்ள நாராயணத்தேவன்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.



    இதுகுறித்து தங்கதமிழ்ச்செல்வன் கூறுகையில், ஏராளமான இடங்களில் மின்னணு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்களிக்க தாமதமாகியுள்ளது. எனவே வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்றார்.  #Loksabhaelections2019 #OPS

    பண விநியோகம் நடைபெறும் தேனி பாராளுமன்ற தொகுதியில் தேர்தலை நிறுத்தியிருக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #Loksabhaelections2019 #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அளித்த பேட்டி வருமாறு:-

    மோடி பிரதமராக இருக்கின்ற வரைக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும். ஏற்கனவே, அமலாக்கத் துறையை, சி.பி.ஐ.யை, வருமான வரித்துறையை வைத்து எப்படி மிரட்டி உருட்டி செய்து கொண்டிருக்கின்றார்களோ அதே அடிப்படையில் தான் இப்பொழுது தேர்தல் கமி‌ஷனையும் செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள்.

    அதன் வெளிப்பாடுதான் வேலூர் பாராளுமன்றத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இப்பொழுது ஆண்டிப்பட்டி தொகுதி, தேனி தொகுதி தேர்தல்களை நிறுத்தவேண்டும் என்ற ஒரு செய்தி வந்து இருக்கின்றது. ஆனால், நியாயமாக தேனி என்றால் தேனி பாராளுமன்றத் தொகுதி தேர்தலை தான் நிறுத்த வேண்டும்.

    ஏனென்றால் அங்கு வேட்பாளராக நிற்கக்கூடிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் சார்பில் 1000 ரூபாய், 2000 ரூபாய் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது அனைவரும் அறிந்தது. அவையெல்லாம் வீடியோக்களாக பதிவு செய்யப்பட்டு, பரவலாக ஆதாரங்களோடு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதற்கு உரிய நடவடிக்கை இன்னும் எடுக்கவில்லை.

    அதேபோல், வேலுமணியின் பினாமியாக இருக்கக் கூடிய சபேசன் என்கின்ற ஒரு ஒப்பந்ததாரர். எல்லாப் பணிகளும் இந்த ஆட்சியில் அவருக்குத்தான் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது. குறிப்பாக உள்ளாட்சித் துறையைப் பொறுத்த வரையில் எல்லாப் பணிகளும் அவருக்குத்தான் வழங்கப்பட்டிருக்கின்றது. சமீபத்தில் அவரது இல்லத்தில் ரெய்டு நடந்திருக்கின்றது. அதைப்பற்றி இதுவரை எந்த செய்தியும் வரவில்லை,

    இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் என்னைப் பொருத்தவரையில், தேர்தலைப் பொறுத்த வரையில். நான் உணர்ந்து கொண்டிருப்பது, ஆளும் கட்சியை சார்ந்து இருக்கக் கூடியவர்கள் எவ்வளவு தான் கோடி கோடியாக இந்த தேர்தலுக்கு செலவழித்தாலும், குறிப்பாக வாக்காளர்களுக்கு 1000, 2000, 5000, 10,000 ரூபாய் எனவும், ஏன் அதையும் தாண்டி வழங்கினாலும் மக்கள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கக் கூடிய ஆட்சியையும், மத்தியில் நடந்து கொண்டிருக்கக் கூடிய ஆட்சியையும் அப்புறப்படுத்துவதற்கான உறுதியை எடுத்து இருக்கின்றார்கள். எவ்வளவு தான் பணத்தை கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும். இந்தத் தேர்தலில் அவர்களுடைய பாச்சா பலிக்காது என்பதுதான் என்னுடைய திடமான நம்பிக்கை.

    இந்தத் தேர்தல் ஒரு புதுமையான தேர்தலாக அமையப் போகின்றது. பணத்திற்கு அடிமையாகாத, பணத்திற்கு வளைந்து போகாத, வாக்காளர்களை இந்த தேர்தல் நிரூபிக்கப் போகின்றது என்பது தான் என்னுடைய திடமான நம்பிக்கை.

    வேலூரில் தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் தூத்துக்குடியில் ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது. அது மிரட்டலுக்காக அச்சுறுத்தலுக்காக, அந்த வேட்பாளர் பயந்து விடுவார் வேட்பாளருக்காக பணியாற்றிக் கொண்டு இருக்கக்கூடிய தி.மு.க.வை சார்ந்த கூட்டணிக் கட்சித் தோழர்கள் வேலை செய்யாமல் படுத்து விடுவார்கள், அதேபோல் பூத் ஏஜென்ட்கள் எல்லோரும் சோர்ந்து போய் விடுவார்கள் என்ற மிரட்டலுக்காக நடத்தப்பட்டது. இந்த மிரட்டலுக்கு எல்லாம் தி.மு.க அஞ்சாது.

    ஜனாதிபதியே கையொப்பமிட்டிருக்கின்ற பொழுது நீதிமன்றத்தில் அதற்குரிய பரிகாரம் வராது என்பது தான் எங்களுடைய நம்பிக்கை. இருந்தாலும் முறையாக என்ன செய்ய வேண்டுமோ அதனை சட்ட ரீதியாக நாங்கள் சட்ட வல்லுனர்களோடு கலந்து பேசி விட்டு அதன் பிறகு முடிவு செய்வோம்.

    சந்திரபாபு நாயுடு நேற்று வந்திருந்த பொழுது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கின்றது என்று சொல்லியிருக்கின்றார். அதை நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றோம், அதைத் தான் அவரும் சொல்லி இருக்கின்றார். அதையெல்லாம் மீறி இந்த தேர்தலில் மக்கள் சரியான ஒரு முடிவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    சேலத்தில் முதல்வர் பணம் கொடுத்து இருக்கின்றார், கேட்டால் பழம் வாங்கினேன், அந்த பழத்திற்கு பணம் கொடுத்தேன் என்பது மாதிரி சொல்கின்றார்.

    அது ஊரை ஏமாற்றுவதற்காக சொல்கின்ற பதில். ஊரை ஏமாற்றுவதற்காக சொல்கின்ற நாடகம் அது. அதை ரகசியமாக கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வெளிப்படையாக அதை கொடுத்துவிட்டு போயிருக்கலாம்.

    தேர்தல் ஆணையம் கூட வரக்கூடிய காலகட்டத்தில், அதையும் ஒரு முறைப்படுத்த வேண்டிய அவசிய சூழ்நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் என்னுடைய கருத்து.

    நான் தெளிவாக மீண்டும் மீண்டும் சொல்கின்றேன். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில், பணத்திற்கு அடிமையாகாத நிலையில்தான் மக்கள் வாக்களிக்க இருக்கின்றார்கள். அதுதான் உண்மை.

    இவ்வாறு அவர் பேசினார். #Loksabhaelections2019 #DMK #MKStalin
    தேனியில் ஆரத்தி எடுப்பவர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே அங்கு வாக்காளர்களுக்கு ரூ.1000 சென்று விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார். #LokSabhaElections2019 #KSAlagiri
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந் தேதி தமிழ்நாடு வருகிறார். அப்போது அவர் சேலம், தேனி, கிருஷ்ணகிரி, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.

    ராகுல் பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டங்கள் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் கோரிக்கைகளை அமித்ஷா கேட்டறிந்து செய்கிறோம் என்று சொல்லி இருப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

    டெல்லியில் 150 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணுவையும், விவசாயிகளையும் அமித்ஷாவோ, மோடியோ யாரும் சந்திக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

    பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் விவசாயத்துக்காகவும், விவசாயிகளுக்காகவும் எதையும் செய்யவில்லை. தமிழகத்தில் வீரம் நிறைந்த, தன்மானம் உள்ள விவசாயிகள் இருந்திருக்கிறார்கள். அமித்ஷாவை அய்யாக்கண்ணு சந்தித்தது வருத்தம் அளிக்கிறது.



    பிரதமர் மோடி கோவையில் பேசும்போது ஜி.எஸ்.டி. பிரச்சினைகளை சரி செய்வேன் என்று கூறி இருக்கிறார். இதைத்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, ப.சிதம்பரம் சொன்னார்கள். அப்போது எங்கள் கருத்தை கேட்கவில்லை. நாங்கள் கூறும் ஆலோசனை முட்டாள்தனமானது என்று மோடி கூறினார். ஆனால் இப்போது ஜி.எஸ்.டி. வரியை சரி செய்கிறேன் என்று கூறுகிறார்.

    பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைப்போம் என்று கூறி இருப்பதை ரஜினி தெரிந்து ஆதரித்தாரா? இல்லை தெரியாமல் ஆதரித்தாரா? என்பது தெரியவில்லை. நாடு முழுவதும் நதிகளை இணைப்பது சாத்தியமில்லை.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பதை தடை செய்ய வேண்டும். தேனியில் ஆரத்தி எடுப்பவர்களுக்கு அ.தி.மு.க.வினர் பணம் பட்டுவாடா செய்கிறார்கள்.

    தேர்தலுக்கு முன்பே அங்கு வாக்காளர்களுக்கு ரூ.1000 சென்று விட்டது. இதை காவல்துறையோ, தேர்தல் ஆணையமோ கண்டு கொள்ளவில்லை.

    ஏ.டி.எம். பணம், விவசாயிகளின் பணத்தை பிடிக்கும் தேர்தல் அதிகாரிகள் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #KSAlagiri

    தேனி தொகுதியில் தனக்கும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கும் இடையே தான் போட்டி நிலவுவதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #ThangaTamilselvan #ADMK #EVKSElangovan
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

    தினகரன் கட்சியில் முக்கிய பிரமுகராக உள்ள இவர் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இப்போது எம்.பி. தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்த தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    3 பேருமே பிரபல நபர்கள் என்பதால் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக தேனி உள்ளது.

    தேர்தல் போட்டி தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. அதுவும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் அந்த கட்சிக்கு மக்களிடம் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

    பொதுமக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் இப்போது எங்களையே ஆதரிக்கிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் கட்சியில் மிகவும் ஜுனியர். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் என்ற ஒரே காரணத்தினால் அவரை முன்னிலைப்படுத்துகிறார்கள்.

    நான் அ.தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தந்தை அ.தி.மு.க.வில் முக்கிய பிரமுகராக இருந்தவர். அவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகவும் சீனியர்.



    டி.டி.வி.தினகரனால் தான் ஓ.பன்னீர்செல்வம் அரசியலிலும், அரசிலும் முன்னுக்கு வந்தவர். இப்போது அவருக்கு எதிராகவே மாறி இருக்கிறார். இது அவருக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும்.

    இந்த தொகுதியில் உள்ள நிலைமை எனக்கு சாதகமாக இருக்கிறது. டி.டி.வி.தினகரன் இந்த தொகுதி எம்.பி.யாக இருந்து சிறப்பான சேவைகளை செய்தார். அவர் எல்லா தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றார்.

    இப்போது இங்குள்ள நிலவரப்படி அ.தி.மு.க. தனது செல்வாக்கை இழந்து விட்டது. அவர்கள் எல்லாம் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக மாறி விட்டார்கள். எனக்கும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. களத்திலேயே இல்லை.

    ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க.வை நாங்கள் தோற்கடித்தோம். அதுபோன்ற நிலை இங்கும் ஏற்படும். இந்த தொகுதியில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் அவர்கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது. கடந்த தேர்தலில் 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றது. அதே வேட்பாளரை இப்போது ஏன் நிறுத்தவில்லை?

    ஓ.பன்னீர்செல்வம் குடும்ப அரசியலை எதிர்ப்பதாக கூறுகிறார். ஆனால் தனது மகனை வேட்பாளராக்கி இருக்கிறார். தனது தம்பியை ஆவின் சேர்மனாக்கி இருக்கிறார்.

    இவ்வாறு தங்க தமிழ்ச் செல்வன் கூறினார். #LokSabhaElections2019 #ThangaTamilselvan #ADMK #EVKSElangovan
    பிரதமர் மோடி 9 மற்றும் 13-ந் தேதிகளிலும், ராகுல் 12-ந்தேதியும் தேனி தொகுதியை குறிவைத்து பிரசாரம் செய்ய இருப்பதால் தமிழக தேர்தல் களத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi
    தேனி:

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 18-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

    அதே தினத்தன்று தமிழகம், புதுச்சேரியில் காலியாக உள்ள 19 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.

    வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடந்தது. மார்ச் 29-ந்தேதி வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

    தமிழக தேர்தல் களத்தில் மொத்தம் 845 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 65 பேர் பெண்கள் ஆவார்கள்.

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி. தினகரன் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் இடையே 5 முனைப்போட்டி நடைபெறுகிறது.

    தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. எனவே அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் முதல் கட்ட பிரசாரத்தை முடித்துள்ளனர். அதே போல் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி சென்னை மற்றும் நாகர்கோவிலில் பிரசாரத்தை முடித்துள்ளார்.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ந் தேதி முதல் மாவட்டம் தோறும் பிரசாரம் நடத்தி வருகிறார்.

    இதே போல் கூட்டணி கட்சி தலைவர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான தலைவர்கள் தங்களது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்து விட்டனர்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி, ராகுல் 2-ம் கட்ட பிரசாரத்துக்காக தமிழகத்துக்கு வர உள்ளனர். தற்போதைய தகவல்படி மோடி 2 தடவையும், ராகுல் ஒரு தடவையும் தமிழ்நாட்டுக்கு வர உள்ளனர்.

    மோடி 9 மற்றும் 13-ந் தேதிகளிலும், ராகுல் 12-ந்தேதியும் தமிழகம் வருகிறார்கள். அவர்கள் இருவரும் தேனி தொகுதியை குறிவைத்து பிரசாரம் செய்ய இருப்பதால் தமிழக தேர்தல் களத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அ.ம.மு.க. சார்பில் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வனும் போட்டியிடுகிறார்கள்.

    இதனால் தேனி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. அதோடு அங்கு தேர்தல் களமும் சூடு பிடித்துள்ளது. வெற்றியை தட்டிப் பறிக்க 3 வேட்பாளர்களிடமும் கடும் சவால் ஏற்பட்டுள்ளது.

    தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேனியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந்தேதி பிரசாரம் செய்ய உள்ளார்.

    இதற்காக தேனி நகர் பைபாஸ் ரோடு புது பஸ்நிலையம் செல்லும் சாலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ராகுல்காந்தி பேசுகிறார். காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வேட்பாளர் இளங்கோவன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடத்தை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    ராகுல் பிரசாரம் செய்துவிட்டு செல்லும் அடுத்த நாளே அதாவது 13-ந் தேதி பிரதமர் மோடி ஆண்டிப்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அப்போது தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், ஆண்டிப்பட்டி சட்டமன்ற அ.தி.முக. வேட்பாளர் லோகிராஜன், பெரியகுளம் அ.தி.மு.க. வேட்பாளர் மயில்வேல், ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

    இதற்காக ஆண்டிப்பட்டி அருகே எஸ்.ரெங்கநாதபுரம் பிரிவில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் போட்டி பிரசாரம் செய்ய உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தலைவர்கள் வருகையையொட்டி தேனி மாவட்டத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தான் யாரையும் போட்டியாக கருதவில்லை என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்வோகன் தெரிவித்தார். #LSPolls #Congress #EVKSElangovan
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மனுத்தாக்கல் செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேனி மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை அறிந்து அதனை நிறைவேற்ற பாடுபடுவேன். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக மதுரை-போடி அகல ரெயில் பாதை திட்டப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை மேற்கொண்ட 4 காண்டிராக்டர்கள் ஓடி விட்டனர்.

    கடைசியாக பணி செய்த ஆந்திராவைச் சேர்ந்த காண்டிராக்டர் ஒருவர் தன்னிடம் அதிக அளவு கமி‌ஷன் கேட்பதாக என்னிடம் கூறினார். தேனி மாவட்ட மக்களின் நீண்ட கால பிரச்சனையை கருத்தில் கொண்டு நான் வெற்றி பெற்ற 6 மாதத்தில் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த பாடுபடுவேன்.


    தேனி தொகுதியில் நான் யாரையும் போட்டியாக கருதவில்லை. தற்போது பிஞ்சிலேயே பழுத்த பழம் நிறைய உள்ளது. நான் மரத்திலேயே பழுத்த பழம்.

    இந்த தொகுதிக்கு புது முகம் என்று என்னை கூறுகின்றனர். நடிகர் நடிகைகளில்தான் புதுமுகம் உண்டு. நான் அரசியலில் பல ஆண்டுகளாக பணி செய்துள்ளேன். நான் வெற்றி பெற்றால் தேனி மாவட்டத்தை சுற்றுலா தலமாக்குவேன். அதோடு மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Congress #EVKSElangovan
    ×